Monday, 3 March 2014

தாம்பத்திய உறவு - ஒரு அலசல்


40/50 வயது தாண்டிய நிறைய ஆண்கள் (மனைவியுடன் இருந்தாலும் சரி இல்லாவிட்டாலும் சரி) தனிமையாக உணருவதாகவும், பெண் துணைக்கு ஏங்கிக்கொண்டிருப்பதாகவும், உடலுறவு கொண்டு நீண்ட நாட்கள் கடந்து விட்டதாகவும், மனைவிக்கு வயதாகி விட்டதால் ஆர்வம் குறைந்து இப்பொழுதெல்லாம் தட்டி கழித்து விடுவதாகவும் ஒரே புலம்பல். இது ஏன்?  உண்மையிலேயே பெண்கள் சிறிது கால கட்டத்திற்கு பிறகு ஆர்வம் இழந்து விடுகிறார்களா, அப்படித்தான் என்றால், ஏன்? ஒரு அலசல். சில ஆண்களிடமும், சில பெண்களிடமும் இது குறித்து உரையாடினதில், வெளிப்பட்ட சில உண்மைகள்.

ஆண்கள் தரப்பு

இதில் சமீபத்தில் திருமணமானவர்கள், சில வருடங்கள் ஆனவர்கள், பல வருடங்கள் ஆனவர்கள் அனைவரும் உண்டு. சமீபத்தில் திருமணமானவர்கள் தாம்பத்திய உறவு மிகவும் அருமையாக போய்க்கொண்டு இருப்பதாகவும், சில வருடங்கள் ஆனவர்கள், ஒன்றும் பிரச்சினை இல்லை எனவும், நாற்பத்தி ஐந்து / ஐம்பது வயதை கடந்தவர்கள், எங்கே அவளுக்கு சுத்தமாக இதிலெல்லாம் ஆர்வம் போய் விட்டது, காய்ந்து போய் கிடக்கிறேன் என்றும் (பெரும்பாலானோர்) சொல்ல கேட்கிறேன். இது ஏன் என ஒரு அலசல். இதை படிக்கும்  நண்பர்கள் படித்து தனக்குள் ஒரு அலசல் செய்வார்கள் என்ற நம்பிக்கையிலேயே இதை பதிவிடுகிறேன்.

செக்ஸ் என்பது ஆண் பெண் இருவருக்கும் ஒரு அடிப்படை தேவையே. ஒரு ஆணுக்கு இருக்கும் எதிர்பார்ப்பு ஒரு பெண்ணிற்கும் இருக்கும். ஆனால் இயற்கை இருவரையும் உடல் ரீதியாக வேறு வேறு மாதிரி படைத்திருக்கிறது. ஒரு ஆண் உச்சத்தை அடைவதிற்கு, அவன் மனம் அதை விரும்பும் நிலையில் இருக்கும்பொழுது, சில நொடிகளோ, இல்லை சில நிமிஷங்களோ போதுமானதாக உள்ளது. ஒரு பெண்ணிற்கு சில தூண்டுதல்கள் மட்டுமின்றி, தன்னை கொடுக்கும் ஆணின் அன்பின் வெளிப்பாடாக இருப்பதை உணர்ந்தாலே அது மனதிற்கும் விரும்பத்தக்கதாக உள்ளது. (இதுவும் பெரும்பாலான பெண்களை பற்றியே சொல்கிறேன் – விதி விளக்குகள் எங்கும் உண்டு, இதிலும் உண்டு).

அண்மையில் நான் ஒரு செய்தி கேட்டேன். உலகில் 65% பெண்கள் உச்சம் என்பதை அடைந்ததே இல்லையாம், கணக்கெடுப்பில் (சவுதி அரேபியா விட்டு மற்ற நாடுகளில் மாதிரி கணக்கெடுப்பில் கண்டுபிடிக்க பட்டதாம் இது).

இன்றும் நம் நாட்டு பெண்கள் இது பற்றி மிகவும் வெளிப்படையாக பேச தயங்குபவர்களாகவே இருக்கின்றனர். என்னால் முடிந்த வரை சில பெண்களிடம் இது குறித்து பேசினேன். அந்த உரையாடல்களிலிருந்து நான் புரிந்துகொண்ட விஷயங்கள். இது உங்கள் புரிதலுக்கு. எங்கும் யாரையும் புண்படுத்தும் நோக்கம் இல்லை. ஆனால் வார்த்தைகள் ஆழமாக இருந்தால், அதுவும் உங்கள் புரிதலுக்காகவே அன்றி, புண்படுத்த அல்ல.

சில பெண்களுக்கு உச்சம் என்று ஒன்று இருப்பதே தெரியவில்லை.

சில பெண்களுக்கு தெரிந்தும் அடைந்ததில்லை

• சில பெண்கள் கூறியது – வருவார், இரண்டு நிமிடங்கள் இங்கு, அங்கென தொடுவார், பிறகு உள்ளே நுழைப்பார், சில நிமிடங்களில் அவர் வந்து விடுவார். திரும்பி படுத்து உறங்கி விடுவார். எனக்கு அப்பொழுதுதான், தூண்டிவிட்டார்போல இருக்கும், அவர் தொடுதலுக்காக மனமும், புணர்ச்சிக்காக உடலும் ஏங்க ஆரம்பிக்கும். அதற்குள் அவர் குறட்டை விட ஆரம்பித்திருப்பார். சில நாட்கள் கண்ணீரும், சில நாட்களில் என்ன வாழ்கை இது என்ற வெறுப்பும், தூக்கம் கலைக்கும். இப்படித்தான் ஓடிக்கொண்டு இருக்கிறது.

• இன்னும் சில பெண்கள் சொன்னது கொஞ்சம் ஆறுதலாக இருந்தது. என் மேல் மிகவும் அன்பாக இருப்பார், முத்தம் கொடுத்து, அன்பை பகிர்ந்து, எனையும் தூண்டிவிட்டே செய்வார். ஆனாலும் அவர் சீக்கிரம் வந்துவிவார். நான் வந்துவிட்டேனா என்று மிகவும் அக்கறையுடன் கேட்பார். இல்லை என்று சொல்ல மனம் வராது, கஷ்டப்படுவாரோ என்று தோன்றும். அதனால், வந்ததாக நடித்து விடுவேன் பெரும்பாலான நேரங்களில்.
இதில் இரண்டாவது ஆண்கள், பெண்கள் சிறிது மனம் விட்டு பேசினால் புரிந்து திருத்திக்கொள்ள வாய்ப்புள்ளது.

நான் வெளி வந்தால் போதும், உன்னை பற்றி எனக்கென்ன கவலை என்ற அகம்பாவம் உள்ள ஆண்களும் உண்டு. தான் செய்வது தன் மனைவியையும் திருப்தி படுத்தி விட்டதாக, நினைத்து செயல்படும் ஆண்களும் உண்டு. அகம்பாவத்தில் செயல் படும் ஆண்களை யோசிக்க வைப்பது மிகவும் கடினம். வேரிலேயே பூச்சி பிடித்திருக்கிறது....என்ன செய்ய?

செக்ஸ் என்பது அன்பு மிகையின் வெளிப்பாடாகவே நான் கருதுகிறேன். நம் குழந்தைகள் இருக்கிறார்கள். அவர்களை எப்பொழுதும் நாம் கட்டி அனைத்து முத்தம் கொடுத்துக்கொண்டே இருப்பதில்லை. சில நேரங்களில், அன்பு அதிகமாக உணரப்படும் வேளையில், அள்ளி அனைத்து முத்தம் கொடுக்கிறோம். அதே போல், ஒரு ஆணிற்கும், பெண்ணிற்கும் இடையில் இருக்கும் அன்பு மிகுதியில், உரிமை உள்ள உறவுகளில், ஒருவரை ஒருவர் அனைத்து அதற்கும் மேலான இன்பமாக செக்ஸ் பகிர்ந்து கொள்கிறோம். இல்லை இப்படித்தான் இருக்க வேண்டும் என்பது என் கணிப்பு.

விந்து வெளியேற்றல் மட்டுமே தேவை எனில், ஒரு பெண் எதற்கு? தன் கை இருக்கிறது? கழிப்பறை ஓட்டை போதுமே? ஒரு பெண்ணின் ஓட்டை தேடி, அவளை துன்புறுத்த வேண்டிய அவசியம் என்ன?
நல்ல மனம் கொண்டு செய்தாலுமே, புரிதல் இல்லை எனில், எத்தனை நாட்கள் இல்லை வருடங்கள் ஒரு பெண் அன்பின் பெயரால் கூட சகித்துக்கொண்டிருக்க முடியும்?

அன்பின் வெளிப்பாடாக செக்ஸ் இருந்தால், கண்டிப்பாக அங்கு அவளும் திருப்தி கொள்கிறாளா என்ற அக்கறையும் இருக்கும், அவளின் விருப்பு வெறுப்புகளை மதிக்கும் மனமும் இருக்கும். சுயநலமாகவே இதை யோசித்தாலும், கெடுதல் ஆண்களுக்குமே....

இப்படி ஆண்களுக்கு மட்டுமே இன்பம் கொடுத்து, தன்னால் அதை சுவைக்க முடியாத, இதில் சுவையும் இருக்கிறது என்று அறியாத பெண்கள் என்ன செய்வார்கள்? சில வருடங்கள், கிடைக்கும் சிறு சுகங்களுக்க்காகவும், அன்பின் பெயராலும், மனதால் தன்னை கொடுப்பார்கள். சில வருடங்களுக்கு பிறகு, வேறு வழி இல்லை, இது இப்படித்தான் என்ற சகித்து போவார்கள்..(இல்லை என்றால், எங்கு வேறு பெண் தொடர்பு ஏற்பட்டு விடுமோ என்ற பயமும் காரணமாக இருக்கலாம்) .இன்னும் சில வருடங்கள் போனால், அலுத்து போகிறார்கள். இப்பொழுது அவர்களுக்கு தோன்றுவது – எவ்வளவு நாட்கள் இப்படியே இருப்பது, போதும் இனி தன்னால் முடியாது என முடிவெடுக்கிறார்கள் – பிள்ளைகள் வளர்ந்தாகி விட்டது. இவருக்கும் வயதாகி விட்டது, இனி எங்கே சென்று விடுவார். நினைத்தாலும் யார் கிடைத்து விட போகிறார்கள் என்ற இறுமாப்பு வருகிறது. தலை வலி ஆரம்பிக்கிறது இங்குதான் (பெண் தலை வலி என நடிக்க ஆரம்பிக்கிறாள், ஆணுக்கு இத்தனை நாட்கள் கிடைத்து கொண்டிருந்தது கிடைக்காமல் காயப்போட படுகிறான்).

ஆனால், இவ்வளவிலும், ஒன்று நடக்கிறது. பெண் அவனிடம் உண்மை கூறாமலே காலம் கடத்தி இருக்கிறாள். அவனும், அவளும் சேர்ந்தே இன்பம் அடைந்த்ததாக நினைத்து கொண்டிருந்திருக்கிறான். இப்பொழுது அவன் நினைக்கிறான், மனைவிக்கு வயதாகி விட்டது, இதில் ஆர்வம் குறைந்து விட்டதென. அங்கு ஆர்வம் இருந்திருந்தால் அல்லவோ குறைவதற்கு? ஆர்வத்தை தான் முளையிலேயே கிள்ளி எறிந்தாகி விட்டதே?
என் இளமையில், பேருந்துகளில் செல்லும்போதும், வீட்டிற்கு வரும் வயதான ஆண்களிடமும், கிடைக்கும் சந்தர்ப்பங்களில் எல்லாம், பெண்களை உரசிப்பார்க்கும் தன்மையை கண்டிருக்கிறேன். அப்போழுதெல்லாம், நான் நினைத்திருக்கிறேன். இள வயது ஆண்கள், ஒழுங்காக நடந்து கொண்டு இருக்கிறார்களே, ஏன் வயதானவர்கள் இவ்வளவு கேவலமாக நடந்து கொள்கிறார்கள் என? ருசி கண்ட பூனை, இப்பொழுது கிடைக்காமல் இருக்கும் தவிப்பு, இந்த கேவலமான காரியங்களை செய்ய வைக்கிறதென இப்பொழுது புரிகிறேன். எல்லோரையும் சொல்லவில்லை...சிலர் இப்படி தீர்த்துகொள்(ல்)கிறார்கள்.

இன்னொரு பிரச்சினையும் உள்ளது. ஆண்கள் தனக்கு தேவை எனில், மனைவியை தேடி கொஞ்சியோ, மிரட்டியோ, காரியம் முடித்துக்கொள்கிறார்கள். ஆனால், என்றாவது தனக்கு தோணாத நேரங்களில் மனைவிக்கு தோன்றுமா என யோசிக்கிறார்களா என தெரியவில்லை. இன்றைய கால கட்டத்தில் இளம் பெண்கள் மனம் திறந்து சொல்கிறார்கள்...ஆனால் இன்று 40/50 வயதில் இருக்கும் எத்தனை பெண்கள், தனக்கு தேவை எனில் தன் ஆணிடம், தானாக முன்வந்து சொல்கிறார்கள் என தெரியவில்லை.

முதலில் பெண்கள் ஆண்களை தேடி வரவேண்டுமானால், அவளும் அந்த சுகத்தை அனுபவித்தாலே நடக்கும். ஆண்களுக்காக மட்டுமே அரங்கேறும் நாடகத்தில், எத்தனை நாட்கள் அரிதாரம் பூசி உலா வரமுடியும்?

வாழ்வு முச்சூடும் அன்பின் வெளிப்பாடாக, ஒருவர் உணர்வை ஒருவர் புரிந்து, இருவரும் முழு மனதுடன், முழு மகிழ்ச்சியுடன், உறவு கொண்டால் மட்டுமே, பின்னாளில் பெண்களுக்கு தலை வலி வராது, ஆண்கள் தவிப்பில் தவறாமல் இருக்கலாம்.

பெண்களை, பெண்களாக மதிக்காமல், கழிப்பறையாக நினைத்தால் (இது உங்கள் நினைப்பில் இல்லாமல் இருக்கலாம், நினைப்பு சரியாகவே இருக்கலாம், ஆனால் நடப்பு இப்படி இருந்தால்).......விடையை ஊகித்துக்கொள்ளலாம்!