Saturday, 24 October 2015

உலகில் எத்தனையோ நல்ல விஷயங்கள் இருக்க, தீய விஷயங்களையே ஏன் அலசிக்கொண்டிருக்கிறாய் என சில நண்பர்கள் கேள்வி எழுப்புகிறார்கள். இதனால் நான் ஒரு நெகடிவ் (negative) பெண்மனியோ என்ற ஐயமும் எழுஙதாக கூறுகின்றனர்.

என் விளக்கம். இயற்கையால் படைக்கப்பட்டவையில் தீயது என எதுவுமே இல்லை. நல்லவை மட்டுமே உண்மைகள். நல்லவைகளை தீயவை ஆக்குவது ஆறு அறிவு படைக்கப்பெற்றதாக கூறிக்கொள்ளும் நாமே.

அப்படி என்றால் மனிதனும் இயற்கையால் உருவாக்கப்பட்டவன் தானே அவன் செயல்கள் எப்படி தீயவைகளாக முடியும் என்ற கேள்வி எழலாம். அவன் நல்லவைகளயே செய்தான். ஆனால் அளவிற்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு என்பதை அறிய தவறி விட்டான். நன்மைகளில் இருந்துதான் தீமைகள் உருவாகின்றன என்பதற்கு சரியான உதாரணம் பணம். தேவைகள் என்பது நமக்கும் மற்ற உயிரினங்கள் போல் நம் உணர்வுகளினால் உந்தப்பட்டவையே. அவ்வுணர்வுகள் வயிற்றுப்பசியும், பாலுணர்வும் மட்டுமே!

மனிதனின் ஆறாம் அறிவு என்று சொல்லப்படும் ஒன்றினால் உந்தப்பட்டு ஆசைகள் உருவாகி, அவை தேவைகளாக மாறின. வேண்டியவற்றை பெற பண்டமாற்று முறைகள் செயல்பட்டண. பண்டமாற்று முறையில் ஒரு பிரச்சினை. உன்னிடம் இருப்பது எனக்குத்தேவை. ஆனால் என்னிடம் உள்ளது உனக்குத்தேவை இல்லை எனில், நான் அதை எப்படி பெற முடியும்?

எல்லோரும் தேவைகள் பூர்த்தி செய்து கொள்ள பொதுவாக ஒரு பொருளின் அவசியம் ஏற்பட்டது. பணம் என்ற செயற்கையான விஷயம் தோற்றுவிக்கப்பட்டது. இது தீமையான செயலாகுமா? எல்லோர் நலனும் கருதி செய்யப்பட்ட ஒரு விஷயமே. மனிதனின் ஆசைகள், பேராசைகளாக உருவெடுத்த போதுதான், மனிதனின் நன்மைக்காக உருவாக்கப்பட்ட பணம் இன்று ஏழைகளை உருவாக்கியிருக்கிறது. ஏழ்மை என்ற ஒன்று உருவான பின்பே செல்வந்தன் என்ற ஒருவன் அழைக்கப்பட்டான். இல்லையெனில் அந்த வார்த்தைகூட பிறந்திருக்காது.

இந்த தீமை எங்கிருந்து வந்தது? நன்மை என நினைத்த விஷயம், அந்த நன்மையை அளவிற்கு அதிகமாக நாடியதின் பயனே! இயற்கையான உந்துதலில் மனிதன் நன்மையையே நாடினான், அதின் அதிகம் தீமையில் முடிந்தது.

இப்படி பல உதாரணங்கள் கொடுத்துக்கொண்டே போகலாம்.

இங்கு நன்மைக்கு தனி நோக்கு தேவையில்லை. தீமைகளை நோக்கி, அவற்றை போக்க முயற்ச்சித்தால் நன்மைகள் தங்கும்.

நான் நன்மைகளை மட்டுமே நோக்குவேன். அதனால் நான் பாசிடிவ் (positive) மனிதன் என நினைத்தால் நீ தீயவைகளை கண்டு அஞ்சுகிறாய் எனவே நான் கொள்வேன். அச்சம் எப்படி நல்லவிஷயமாகும்?

Positivity (பாசிடிவிடி) என்பது நடக்கும் தீயவைகளை காணமாட்டேன், கண்களை மூடிக்கொண்டு கனவுலகில் வாழ்வது அல்ல. தீயவைகளயும் நேருக்கு நேர் சந்தித்து முடிந்தால் தீர்வுகாண முயல்வதே!

உதாரணம். தாயிற் சிறந்த கோவிலுமில்லை தந்தை சொல்மிக்க மந்திரமில்லை என்ற நல்ல விஷயத்தை பலர் பல் வேறு வார்த்தை ஜாலங்களில் சொல்லிக்கொண்டே இருக்கிறோம் பல நூற்றாண்டு காலங்களாக. தாயும் தந்தையும் இப்படி இருப்பது இயற்கை. அதை சொல்லித்தெரியவேண்டியதில்லை. ஆனால் இயற்க்கைக்கு புறம்பாக எத்தனையோ தாய் தந்தையர் இருப்பதினால் தான் அனாதை இல்லங்கள் மன்றிக்கிடக்கின்றன. அந்த தீமையை கண்டவர்கள் தான் அப்படிப்பட்ட நிறுவணங்களை உருவாக்கினார்கள். எத்தனையோ குழந்தைகள் பாதுகாக்கப்படுகிறார்கள்.

முதியோர் இல்லங்களுக்கு முன்பே உருவானவை அனாதை இல்லங்கள். உனக்கு இயற்கையான தாய்தந்தையர் அமைந்த காரணத்தினால் தாய் தந்தை என்ற வார்த்தையே பூஜிக்கப்பட வேண்டியது என நினைத்தால் அது அறியாமையே!

நல்லவைகள் இயற்கையாக உள்ளவைகள், அவற்றை போற்ற வேண்டிய அவசியமில்லை, அவைகளை காக்கவேண்டிய அவசியம் உள்ளது. தீயவைகளை கண்கொண்டு பார்த்து அகற்றினாலே நல்லவைகள் காப்பாற்றப்படும்.!

Wednesday, 21 October 2015

இயற்கை சூழலில்
இசைவாக நடந்தேன்
அருவியின் வீழ்ச்சியில்
ஆசையாக நீராடினேன்

மடிதனில் தலை வைத்து
மலர்ந்த கதை அளந்தேன்
தோளினில் சாய்த்தே
கேசம்தனை கலைத்தேன்

மனதினில் மாயங்கள்
மணந்தவனை நினைத்தே

இரவும் வந்த்து
இருளும் சூழ்ந்தது
நிலவை தேடினேன்
நட்சத்திரங்களும் காணவில்லை

கரு மேகங்கள் மூண்டன
இராட்சதன் ஒருவன்
தேரேறி வந்தான்
பட்டாடை களைந்தான்

முகம் தெரியா மூலையில்
முகமூடி கிழிந்தது
நிர்வாண நிஜமதில்
பட்டுப்புழுக்கள் நெளிந்தன!

Friday, 16 October 2015

ஆடை கண்டான்
உடல் மறைத்தான்
நிதர்சணங்கள்
நிர்மூலமாயின!

இயற்கை மறுத்தான்
வெட்கம் கொண்டான்
நிர்வாணம் மறைத்து
தன்மானம் கூவினான்

திறந்திருந்தவை
மூடக்கற்றான்
மறைவில் வளர்த்தான்
மனநோய்கள் பலவே

நோய் புரிந்தான் ஒருவன்
இயற்கை திரும்பினான்
ஆடை களைந்தான்
தெருவில் நடந்தான்

பித்தனவனென்றே
பீதி கொண்டனர்
பீடித்த வியாதி
தனக்கென அறியாமல்!








வாசலில் வாடிய மலரென
வீழ்ந்நிருக்கும் மூதாட்டியர்!
உள்ளே கர்ப்பக்கிரகத்தில்
அன்றலர்ந்த மலர்கள் காணிக்கை!

வயிறொட்டிய பிள்ளை விரட்டி
கற்சிலைக்கு பால்பஞ்சாமிர்தம்!

உடல் மறைக்க ஆடையின்றி
வெட்கம் தொலைத்த கட்டாயம்
சிற்பியின் கைவண்ணம் மறைத்து
பட்டுப்பூச்சி கொன்று பட்டாடை!

ஏழ்மை கொடுத்த விதியாக
கண்டவன் கொண்ட உடல்கள்!
அலங்கார ஊர்வலமாக வீதியில்
விக்கிரகங்களின் திருக்கல்யாணங்கள்!

புண்ணியங்கள் பல சேர்க்க
பாவங்கள் பல புரியும் மானிடர்கள்!

கைகொட்டி சிரிக்கிறான்
கல்லில்லாத தெய்வமவன்!